பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிரதமர்!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இந்தநிலையில், பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் லீ, லிபரல் ஜனநாயக கட்சியில் இணைந்தார். இதனால், பாராளுமன்றத்தில் பொரிஸ் ஜான்சன் தனது பெரும்பான்மையை இழந்துள்ளார்.

அதன்படி, ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிற் உடன்படிக்கை ஏற்படுவதை தடுக்க தேவையான சட்டத்தை பாராளுமன்றத்தில் வெற்றி பெற செய்ய பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதல் கட்டத்தில் தோற்கடித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்த கோரும் இந்த சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற பொது அவையில் நடந்தப்பட்ட வாக்குப்பதிவில் இதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்தன.

இந்த வாக்குப்பதிவு குறித்து பதிலளித்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நாட்டில் பொதுத்தேர்தலை வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சட்டமூலத்தை தான் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் நடப்பதற்கு முன் பிரெக்ஸிற் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பைன் கூறியுள்ளார்.

இந்தநிலையிலட, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 உறுப்பினர்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை தோற்கடித்துள்ளனர்.

இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த பாராளுமன்ற கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அவர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor