விவசாயி வீட்டில் தரைக்கு அடியில் ரகசிய அறை!!

பிரித்தானிய விவசாயி ஒருவரின் மகன் தரைக்கடியில் ரகசிய அறை ஒன்றை உருவாக்கி அதற்குள் நவீன முறையில் செடிகளை வளர்த்துள்ளார்.

Petrockstoweயைச் சேர்ந்த Daniel Palmer (40), தனது தந்தையின் நிலத்தில், தரைக்கடியில் ரகசியமாக வளர்த்தவை சாதாரண செடிகள் அல்ல, கஞ்சா செடிகள்.

நேர்த்தியாக சிமெண்ட் பூசப்பட்ட ஒரு பகுதியை ஆராய்ந்த பொலிசார், அதன் அடியில் ஏதோ இருப்பதை உணர்ந்து தரையை இடித்துப் பார்க்கும்போது, பூமிக்கடியில் ஒரு கஞ்சா தொழிற்சாலையே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விவசாய பொருட்கள் சேமித்து வைக்கும் ஒரு அறை போல காணப்பட்ட ஒரு அறையில், ஒரு திறப்பு இருக்க, அதன் வழியே உள்ளே சென்றால், அங்கு தண்ணீர், மின்சார விளக்குகள் வசதியுடன் நவீன முறையில் வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளுக்கு, தொடர்ந்து, பல்லாயிரம் பவுண்டுகள் மதிப்புடைய கஞ்சாவை வளர்க்கும் அளவுக்கு அந்த இடம் சகல வசதிகளும் பொருந்தியதாக இருந்துள்ளது.

பொலிசார் அந்த ரகசிய இடத்திலிருந்து கைப்பற்றிய கஞ்சாவின் மதிப்பு மட்டுமே 384,000 பவுண்டுகள் ஆகும்.

பொலிசார் Palmerஐக் கைது செய்தபோது, தனக்கு அது குறித்து தெரியாது என்றும், யாரோ ஒருவர் தன் தந்தையிடம் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் எல்லா இடங்களிலும் அவரது DNA இருப்பது தெரியவந்ததையடுத்து Palmerக்கு ஆறு ஆண்டுகள், மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு நபரையும் பொலிசார் தேடி வருகிறார்கள்.


Recommended For You

About the Author: Editor