குமரன் பத்மநாதனின் நிலையே மகேந்திரனுக்கும்

குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அதே வழியில் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தங்கள் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எனவே முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எங்கு மறைந்திருந்தாலும் நாங்கள் அவரை நாட்டுக்குள் கொண்டுவந்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

குறித்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “கே.பி.க்கு ஏற்பட்ட அதே விதிமுறையை அவர் எதிர்கொள்வார். எனவே அவர் தூங்கும்போது இலங்கை அடையாள அட்டையை தன்வசம் வைத்திருக்குமாறு நாங்கள் அவரிடம் கேட்க விரும்புகிறோம், ஏனெனில் அவர் எழுந்ததும் இலங்கையில் இருக்கக்கூடும்.” என்றார்.

அத்தோடு அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் அரசைக் கோருவதற்கு சட்டமா அதிபர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “சட்டமா அதிபரின் செயல்திறன் மற்றும் சுதந்திரமான நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவான அவரின் செயற்பாடுகள் ஊழலை மூடி மறைக்கும் செயற்பாடாக காணப்படுகின்றது” என கூறினார்.

இலங்கையில் இருந்தபோது மகேந்திரனை கைது செய்ய அரசாங்கம் தவறிவிட்டது என குற்றம் சாட்டிய உதய கம்மன்பில, அவர் நாட்டில் இருந்தபோது மத்திய வாங்கி ஊழலுக்கு பின்னல் இருந்த அரசியல்வாதிகளை வெளிப்படுத்துவேன் என கூறியதால் அரசாங்கத் தலைவர்கள் அவரை கவனமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்” என குற்றம் சாட்டினார்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, மத்திய வங்கி பிணைமுறியின் முக்கிய சந்தேக நபரான அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய ஆவணங்கள் தயாராகிவிட்டது என்றும் சம்பந்தப்பட்ட பெரும் புள்ளிகளை சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுவிட்டன எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor