திமுக திமிங்கலம், அதிமுக விலாங்கு: அமைச்சர்!

ஆசைகாட்டி மாற்றுக் கட்சியினரை திமுகவினர் தங்கள் பக்கம் இழுத்துவருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக அமமுக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து பலரும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில்  இணைந்துவருகின்றனர்.

அமமுகவிலிருந்து அண்மையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியும், வி.பி.கலைராஜனுக்கு இலக்கிய அணி இணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன், இன்று (செப்டம்பர் 3) ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுதொடர்பாக பேசுகையில், “அமமுகவினரும், அதிமுகவினரும் திமுகவுக்கு வருவார்கள் என்று நினைத்து ஸ்டாலின் பதவிகளைக் கொடுத்து வருகிறார். ஆசைகாட்டி ஏமாற்றும் விதமாகத்தான் இது உள்ளது.

இவ்வாறு பதவிகள் கொடுத்தால் வேறு கட்சிகளிலிருந்துதான் திமுகவுக்கு செல்வார்கள். அதிமுகவிலிருந்து யாரும் செல்லமாட்டார்கள். அதிமுகவை ஸ்வாகா செய்துவிடலாம் என்று திமுக என்னும் திமிங்கலம் வாயைப் பிளந்து காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், திமிங்கலத்திற்கே வித்தை காட்டும் விலாங்கு மீன்தான் அதிமுக. யாரிடமும் அதிமுகவினர் மாட்டமாட்டார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், “லண்டனில் பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று முதல்வர் பார்வையிட்டுள்ளார். அதன் தாக்கத்தில் தமிழகத்திற்கு நிறைய திட்டங்களும், முதலீடுகளும் வரும்” என்றும் ஜெயக்குமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor