யாழில்.வழிப்பறி கொள்ளையன் கைது

யாழ்ப்பாணம் நகரில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளம் பெண்ணிடமிருந்து பெறுமதி வாய்ந்த அலைபேசியுடன் கைப்பையைப் பறித்துச் சென்ற நபர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையிடப்பட்ட அலைபேசி மற்றும் கைப்பை என்பன அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் நேற்று (செப்ரெம்பர் 2) திங்கட்கிழமை இடம்பெற்றது. கொள்ளையிட்ட நபர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் பஸ்தியான் சந்திக்கு அருகாமையில் பட்டப்பகலில் இளம் பெண் துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அவரின் துவிச்சக்கர வண்டி கூடைக்குள்ளிருந்த கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக் கொள்ளையர் ஒருவர் அபகரித்துத் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. குருநகர் பூங்கா வீதியைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் கொண்ட புலனாய்வுப் பிரிவினர், அவரைக் கண்காணித்துள்ளனர்.
இந்த நிலையில் கொள்ளையிட்ட அலைபேசியின் லொக்கை எடுத்துத் தருமாறு அந்த நபர் யாழ்ப்பாணம் நகரில் உள்ள அலைபேசித் திருத்தகத்தில் வழங்கியுள்ளார். அந்த அலைபேசியை பொலிஸார் கைப்பற்றி ஆராய்ந்த போது, நேற்றைய தினம் இளம் பெண்ணிடம் அபகரித்த அலைபேசி என்பது உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து அந்த நபரைக் கைது செய்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“தூள் (போதைப்பொருள்) ஒரு முள்ளு 3 ஆயிரத்து 500 ரூபாவாக விற்கப்படுகிறது. அதனை வாங்குவதற்கு பணம் கிடைக்காததால் வீதியில் சென்ற பெண்ணிடம் அலைபேசியைக் கொள்ளையிடுவதற்காக அவரது கைப்பையைப் பறித்துச் சென்றேன்” என்று சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட அலைபேசியும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: ஈழவன்