ராட்சஸியை பாராட்டிய மலேசிய கல்வியமைச்சர்

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை மலேசிய கல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார்.

கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த ‘ராட்சசி’ படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனாலும் பாரியளவில் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில்,ராட்சசி படத்தை பார்த்த மலேசியா கல்வியமைச்சர் மஸ்லி மாலிக், படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “இந்த படத்தை அதிகாரிகளோடு பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. ஆகையால் இந்த படம் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதுவேன். கண்டிப்பாக, இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இதன் கதை அற்புதமாக இருக்கிறது. கதாபாத்திரங்களும் அருமை. கல்வி அமைச்சராக இந்த படத்தை பார்ப்பது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் நம் நாட்டின் சூழலோடு என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது. கீதா ராணி ஒரு பெரிய சூப்பர்ஹீரோ கதாபாத்திரம். பெரிய மாற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை அவர் நமக்கு நிரூபிக்கிறார்.

நாம் செய்யவேண்டிய பலவகையான திட்டங்களும் மாற்றங்களும் இந்த படத்தில் வெற்றிகரமாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இலவச காலை உணவுத் திட்டம். உணவை தாண்டிய சில விஷயங்களை பற்றிய எனது எண்ணங்களை இந்த படம் பிரதிபலிக்கிறது.

நமது குழந்தைகளோடு ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாணவர்கள் படிப்பு நிறுத்தப்படும் பிரச்சினையைத் தீர்க்க பொலிஸாரையும்  அனைத்து அரசியல் கட்சியினரையும் கீதா ஈடுபடுத்தியுள்ளார்.

இதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தைகள் படிப்பு தடைப்படாமல் இருக்க அனைத்து மூலைகளிலும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஏனெனில், ஒரு சமூகத்தின் இலக்காகவும் திட்டமாகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் கல்விதான் உதவும் என்று நம்புகிறேன். ஆகையால் இந்த படத்தை அனைவரும் விரைந்து பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்” என பதிவேற்றியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்