எகிறிச்செல்லும் தங்கத்தின் விலை

விழாக்காலங்களும் பண்டிகைகளும் நெருங்கிவரும் நிலையில் திருமண சீசனும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இயல்பாக தங்கம் வாங்குவதற்கான நெருக்கடியும் மக்களிற்கு மிகவும் அதிமாக இருக்கும்.

ஏற்கனவே சர்வதேச காரணிகளால் தங்க விலை செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது இப்போது இது போன்ற விசேஷங்கள் வந்தால் விலை ஏற்றத்தை வேண்டும்.

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக இன்று 40,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக இன்று 37,020 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகின்றது.

கடந்த சில வருடங்களில் இல்லாத புதிய உச்ச விலையை நோக்கி தங்கம் ஓடிக் கொண்டு இருப்பதைக் இது காட்டுகின்றது.

கடந்த ஆகஸ்ட் 01, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 36,160 மட்டுமே. ஆனால் இன்று அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆக கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமாராக 11.5 சதவிகிதம் விலை அதிகரித்து உள்ளது.

இப்படி விலை ஏறினால் அடுத்து வரும் திருமணங்களில் தங்கம் வாங்குவதற்கே தனியாக தனி நபர் கடன் வாங்க வேண்டி இருக்கும் என பலரும் அங்கலாய்க்கின்றனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கிக் குழுமம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

அதில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, சீனாவின் மக்கள் வங்கி, ரஷ்யாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் ரஷ்யா, துருக்கி நாட்டின் சென்ட்ரல் பேங்க் ஆஃப் ரிபப்ளிக் ஆஃப் டர்க்கி… போன்ற பல உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் இனி வரும் காலங்களில் அதிக அளவில் தங்கத்தை வாங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கின்றது.

தற்போது உலக பொருளாதார சூழலில், வளரும் நாடுகளின் கரன்ஸி ஒரு மோசமான, நிலையற்ற தன்மையிலேயே வர்த்தகமாகி வருகிறது.

எனவே துருக்கி, கஜகஸ்தான், சீனா போன்ற வளரும் நாடுகள் தங்களின் முதலீடுகளை பன்முகத் தன்மை உடன் மாற்றி அமைத்துக் கொள்ள தங்கம் உதவும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி மத்திய வங்கிகள் மட்டும் சுமார் 650 டன் வரை இன்னும் அதிக தங்கத்தை வாங்கலாம் என கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது மத்திய வங்கிகள், தங்கத்தில் முதலீடு செய்வது மிக முக்கிய விஷயமாக உலக சந்தைகளில் பார்க்கப்படுகிறது.

தங்கம் கடந்த 2013-ம் ஆண்டு தொட்ட உச்ச விலையை, தற்போது மீண்டும் தொட்டு இருக்கிறது என்றால் அதற்கு மத்திய வங்கிகள் தங்கத்தை தாறுமாறாக வாங்கியதும் ஒரு முக்கிய காரணம். அப்போது தொடங்கி இந்த நொடி வரை தங்கத்தில் முதலீடு செய்வதை மத்திய வங்கிகள் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி சரிவு, வர்த்தகப் போர் தொடர்பான கொந்தளிப்புகள், அமெரிக்க டாலரில் இருக்கும் பணத்தை தங்கத்துக்கு முதலீடு செய்து ரிஸ்கை குறைத்து, லாபம் பார்க்க நினைப்பது என தங்க விலை ஏற்றத்துக்கு பெரிய அளவில் உதவிக் கொண்டு இருக்கிறார்கள்.

உலகின் மொத்த தங்க நுகர்வில் 10 சதவிகிதத்தை பல நாட்டு மத்திய வங்கிகள் தான் வாங்கிக் குவித்து இருக்கிறார்கள் என்கிறது ஆஸ்திரேலியா மற்றும் நியூலிலாந்து வங்கிக் குழும அறிக்கை.

அத்துடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் மொத்த அந்நிய செலாவணி ரிசர்வ்களில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்துள்ளார்களாம்.

சீனாவிடம் தற்போது 1,936 டன் தங்கம் இருக்கிறது. ஆக தன் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சீனா இன்னும் நிறைய தங்கம் வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறது அந்த அறிக்கை.

இனியும் வாங்குவோம்

2019-ம் ஆண்டின் முதல் அரை ஆண்டில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் சுமாராக 375 டன் தங்கத்தை வாங்கிக் குவித்து இருப்பதாக உலக தங்க கவுன்சிலில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

இந்த 375 டன் தங்கத்தை வாங்கியதற்கே தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. இனி வரும் மாதங்களிலும் தங்கத்தை வாங்க உலக மத்திய வங்கிகள் ஆர்வம் காட்டுவதாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் அடுத்த 12 மாதங்களில் தங்கத்தின் விலை இன்னும் எவ்வளவு அதிகரிக்குமோ தெரியவில்லை..


Recommended For You

About the Author: Editor