தமிழ் குடும்பத்தை நாடு கடத்துவதில் அவுஸ்ரேலிய அரசாங்கம் உறுதி!

நாடு கடத்தப்படுவதிலிருந்து தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது என அவுஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார்.

அவர்கள் சட்ட விரோதமாக அங்கு சென்று குடியேறி உள்ளதாக கூறி, இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போது அவர்களை நாடு கடத்துவதற்காக கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நாடு கடத்தக்கூடாது என அங்குள்ள அரசியல் தலைவர்கள் பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோன்று இவர்களுக்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், குறித்த விவகாரத்தில் தலையிட முடியாது என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, குறித்த ஒரு குடும்பத்துக்கு விதிவிலக்கு அளித்தால் என்ன நடக்கும் என எனக்கு தெரியும். ஏராளமான மக்கள் இங்கு வர தொடங்கி விடுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குடும்பத்தினர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற தடையுத்தரவையடுத்து அவர்கள் பயணித்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) வரை இடைக்கால தடை விதித்துள்ளது. குறித்த தடை தொடருமா என்பது நாளைய தினமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor