பாலிவுட்டில் மீண்டும் நாயகனாகும் தனுஷ்!!

தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படத்தின் தமிழ் டப்பிங் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது மூன்றாவது பாலிவுட் படத்தின் இயக்குநரை தனுஷ் அறிவித்துள்ளார்.

இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெர்னி ஆப் பகிர்’ என்ற பிரெஞ்ச்- ஆங்கிலத் திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கான பக்கிரி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

தெரு வித்தைக்காரராக தனுஷ் இப்படத்தில் நடித்துள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்கள் தனுஷிடம், ராஞ்சனா மூலம் பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் மீண்டும் இணைவீர்களா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தனுஷ், ‘இன்னும் இரண்டு நாட்களில் ஆனந்த் எல்.ராயை சந்திக்கிறேன். மீண்டும் அவருடன் இணைந்து இந்தி படமொன்றில் பணியாற்றவுள்ளேன்.

விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்’ எனக் கூறியுள்ளார். தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.

அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் நடித்த ஷமிதாப் திரைப்படமும் கவனம் ஈர்த்தது. இந்நிலையில் தனுஷ் வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையவைத்துள்ளது.

ஜூன் 21 ஆம் தேதி பக்கிரி திரைப்படம் வெளியாகிறது. மேலும் சுவாரஸ்யமான இதன் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Recommended For You

About the Author: Editor