கிளிநொச்சியில் கடும் வரட்சி – 35ஆயிரம் பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 9,933 குடும்பங்களைச் சேர்ந்த 34,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கண்டாவளை பிரதேசத்தில் 666 குடும்பங்களைச் சேர்ந்த 2,533 பேரும், கரைச்சியில் 4,145 குடும்பங்களைச் சேர்ந்த 14,780 பேரும், பூநகரியில் 4,185 குடும்பங்களைச் சேர்ந்த 14,634 பேரும், பளையில் 937 குடும்பங்களைச் சேர்ந்த 2,838 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், தற்போது கிளிநொச்சியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பயன்தரு மரங்களும் அழிவடைந்து வருகின்றன.

கால்நடைகள் குடிநீரின்றி அலைவதனையும், நூற்றுக்கணக்கான பயன்தரு மரங்கள் அழிவடைந்ததையும் காணக்கூடியதாக உள்ளது.

கிளிநொச்சி, மலையாளபுரத்திலுள்ள தனியார் காணியொன்றில் காய்க்கும் பருவத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தங்களது கட்டு கிணற்றில் நீர் காணப்பட்டது வறட்சியான காலத்தில் தென்னைக்கு பயன்படுத்தி வந்தோம்.

ஆனால்  இவ்வருடம் அயலில்  பல குழாய் கிணறுகள் 200 அடிவரை வெட்டப்பட்டமையால் தங்களது கிணற்றில்  நீர் வற்றிவிட்டது. இதனால் தென்னைக்கு  பயன்படுத்துவதற்கு நீர் இல்லாது போய்விட்டது எனவும் கவலை தெரிவித்தார் காணி உரிமையாளர்.

இவ்வாறு மாவட்டத்தின் பல இடங்களில் தென்னை உள்ளிட்ட மரங்கள் வரட்சியால் அழிந்து வருகின்றன.

 


Recommended For You

About the Author: ஈழவன்