யாழில்.நடைபெறவுள்ள கண்காட்சிக்கு 60 மில்லியன் செலவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கான ஆரம்பப் பணிகளுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் செப்ரெம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறும் இந்தக் கண்காட்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தொழில் முயற்சியாளர்கள் 10 இலட்சம் பேரை உருவாக்கும் நோக்கில், நிதியமைச்சால் நடத்தப்பட்டு வரும் எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி, கருத்திட்டத்தின் மூன்றாவது தேசிய நிகழ்வு எதிர்வரும் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிறது.

வடக்கில் பிரதான மாவட்டமான யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்த கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கான தெளிவுபடுத்தல், அனுபவப் பகிர்வு உள்ளிட்ட விழிப்புணர்வுகள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சிக்காக யாழ்ப்பாணம் கோட்டையின் வடக்குப் பக்கமாக உள்ள நிலப்பரப்பு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக முனியப்பர் கோவில் தொடக்கம் முற்றவெளி ஊடாக பண்ணை வீதிவரை கிரவல் பாதை அமைக்கப்பட்டு பிரமாண்டமாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தப் பணிகளுக்காக சுமார் 60 மில்லியன் ரூபா பணம் செலவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிரதேச சபைகளால் குடிதண்ணீர் விநியோகிப்பதற்கான தாங்கிகளை அமைப்பதற்கு பண வசதி இல்லை என மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் நிலையில் இவ்வளவு பணம் ஒரு நிகழ்வுக்காக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எண்டர்பிரைஸ் சிறிலங்கா தேசிய கண்காட்சி கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் மொனராகலையில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 24 முதல் 27 வரை அநுராதபுரத்தில் இரண்டாவது கண்காட்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ஈழவன்