கொப்பளத் தொற்று நோய்

குட்டிப் பேரழகியின் மூக்கைச் சுற்றியும் வாயருகிலும் கன்னத்திலும் கழுத்தையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தது இந்தச் சரும நோய்.

சிறிய சிறிய தண்ணீர் கொப்பளங்கள். சில உடைந்து கசிந்தன. அவற்றைச் சுற்றியிருந்த அயறுகள் கருகியிருந்து அவளது முகத்தை நாவுறு பார்த்தன. அவளது வயது 8 மட்டும்தான்

என்ன நோய்?

நான் சிறுவனாக இருந்த காலத்தில் அக்கி என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பலருக்கு வந்ததையும் கண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் Impetigo என்பார்கள். கொப்பளத் தொற்று நோய் என தமிழில் அழைக்கலாம்.

பக்றீரியா தொற்றால் இது ஏற்படுகிறது. Staphylococcus aureus or Streptococcus pyogenes  ஆகிய கிருமிகளே பொதுவாக இந்நோயை ஏற்படுத்துகின்றன.

கடுமையாகத் தொற்றும் ஆற்றல் கொண்டிருக்கும் நோய் இது. ஆனால் பெரிய ஆபத்து அற்றது. பொதுவாக மூக்கைச் சுற்றியும், முகத்தின் ஏனைய இடங்களிலும் ஏற்படும் இந்த நோயானது கைகளால் சொறிவதாலும், துவாய் போன்றவற்றாலும் உடலின் ஏனைய இடங்களுக்கும் பரவக் கூடும். கடுமையான வெக்கையும், வியர்வையால் சருமம் மசமசவென இருக்கும் கோடை காலத்தில் அதிகம் காணப்படும். ஆனால் ஏனைய காலங்களில் வராது என அர்த்தப்படுத்தக் கூடாது.

யாருக்கு அதிகம் தொற்றும்

பாலகர்கள் முதல் சிறுவர்கள் ஈறாக பாதிக்கப்படுவது அதிகம். இருந்தபோதும் வளர்ந்தவர்களிலும் வரக் கூடும்.

பாடசாலைகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் குழந்தைகள் நெருங்கிப் பழகுவதால் தொற்றுவதற்கான சாத்தியம் அதிகம்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல வெக்கை கூடிய கோடை காலத்தில் பரவுவதற்கான சாத்தியம் அதிகம். சருமத்தில் காயங்கள் உரசல் போன்றவை இருந்தால் அவற்றின் ஊடாக கிருமிகள் உட்சென்று விரைவாக பரவிவிடும்.

வளர்ந்தவர்களைப் பொறுத்தவரையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களிடம் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். நீரிழிவு நோயார்கள். சிறுநீரக நோயாளர்கள், எச்ஐவி தொற்றுள்ளவர்கள், ஸ்டிnihயிட் மருந்துகள் உபயோகிப்பவர்களிடையே தொற்றுவதற்கான சாத்தியம் அதிகம்.

பின்பிளைவுகள் ஏற்படுமா?

சொறிச்சல் இருக்காது. சற்று வலி இருக்கலாம். 2 முதல் 3 வாரங்களில் தானாகவே குறைந்து மறைந்துவிடலாம்.

ஆயினும் அவ்வாறு தானாக குணமாகும் வரை காத்திருப்பது நல்லதல்ல. கடுமையாகத் தொற்றக் கூடியது என்பதால் நோயாளியுடன் நெருங்கிப் பழகும் ஏனையவர்களுக்கும் பள்ளித் தோழர்களுக்கும் பரவும் என்பதால் சிகிச்சை அளிக்க வேண்டும்.

நோயெதிர் மருந்துகள் (antibiotics) மூலம் சிகிச்சை அளிப்பார்கள். நோயெதிர் மருந்துகளை ஆரம்பித்து 24 மணி முதல் 48 மணிநேரத்திற்குள் கிருமி பரவும் ஆற்றலை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கவனியாது விட்டால் சிறுநீரகத்தையும் பாதிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் அக்கறை செலுத்தாது இருக்கக் கூடாது.

ஆழமான கொப்பளங்களாக இருந்தால் மறுக்கள் உண்டாவதற்கான சாத்தியமும் உண்டு.

ஆபத்தான் மற்றொரு பின்விளைவு சருமத்தின் கீழாக கிருமி புரையோடுதல் (Cellulitis)  ஆகும். அதிலிருந்து நிணநீர்த் தொகுதிக்கு பரவி அதனூடாக குருதிக்கும் பரவக் கூடும். மிகவும் ஆபத்தான சிக்கல் நிலையாகும். இருந்தபோதும் அதிகம் காணப்படுவதில்லை. காரணம் பெரும்பாலனவர்கள் நேர காலத்துடன் சிகிச்சை பெறுவதாலேயே ஆகும்.

என்ன சிகிச்சை தேவை

சிகிச்சையை பொறுத்தவரையில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளே (Antibiotics)  முக்கியமானவை. ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலும் வெளிப்பூச்சு நுண்ணுயிர் கொல்லி கிறீம் வகைகளே நல்ல பலனைக் கொடுக்கும். Fusidic acid  ஓயின்மென்ட் நல்ல பலனைக் கொடுக்கும்

ஆயினும் இத்தகைய கொப்பளங்கள் பல ஏற்கனவே தோன்றியிருந்தால் அன்ரிபயோடிக் மருந்துகளை வாய் மூலம் உட்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படலாம். Cloxacillin,Flucloxacillin போன்றவை நல்ல பலனைக் கொடுக்கும்.

சருமத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே நோய் ஏற்படமால் தடுக்க முடியும். ஏற்கனவே தோன்றியிருந்தாலும் தினமும் குளித்து அவ்விடத்தை அழுக்கு நீக்கி கழுவி சுத்தத்தை பேண வேண்டும்.

நோயுற்றவரின் உடை, துணிமணிகள், துவாய் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அவற்றை தினமும் துவைத்து கழுவி வெயிலில் காய விட வேண்டும்.

புண்ணிற்கு மருந்து போடுவதற்கு கையுறை பாவிப்பது நல்லது. இல்லாவிடில் கைகளை நன்கு கழுவிய பின்னரே மருந்து பூச வேண்டும். மருந்திட்ட கைகளை மீண்டும் நன்கு கழுவ வேண்டும்.

நோயுற்ற குழந்தையின் கை நகங்களை வெட்டுவதன் மூலம் குழந்தை சொறிந்து காய்ப்படுத்தி கிருமி வேறு இடங்களுக்கு பரவுவதை தடுக்க முடியும்.

எக்ஸிமா, சரும அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றிற்கு பொருத்தமான சிகிச்சை பெறுவதன் மூலம் சரும கொப்பளிப்பு தொற்றுநொய் ஏற்படாமல் தடுக்க முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (Col)
குடும்ப மருத்துவர்


Recommended For You

About the Author: Editor