எளியவர்களின் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்

தாய்லாந்து நாட்டில் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் அவர்களின் கால்தடங்களைப் பதித்து வருகின்றனர்.

ஆனாலும் அவர்களுக்கான சில சிக்கல்கள் அங்கு இருக்கத்தான் செய்கின்றன.

பொதுவெளியில் அவர்களுக்கு இன்னமும் சமமான உரிமைகள் கிடைக்கிறதா என்பது சந்தேகமே. கல்வி, நடிப்பு உட்பட பல்வேறு துறைகளில் அவர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆனால், சில இடங்களில் அவர்கள் குறைந்த ஊதியத்திற்குப் பணிபுரிய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

தங்களின் உரிமைகளைப் பெறுவதற்காக அரசியல் ரீதியிலான தீர்வை எதிர்நோக்கியுள்ளனர். அதன் பொருட்டு அரசியலில் தங்களது தடத்தினைப் பதிவு செய்துள்ளனர்.

தாய்லாந்தில் மார்ச் மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான்வரின் சுக்ஹாபிசிட் என்ற திருநங்கை எம்.பியாக தேர்வாகியுள்ளார்.

இதேதேர்தலில் பவுலின் காம்ப்ரிங் என்ற திருநங்கை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மகாசோன் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அவர் களமிறங்கினார்.

தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் நாட்டின் முதல் திருநங்கை எம்.பி என்ற சிறப்பை தான்வரின் சுக்ஹாபிசிட் பெற்றார். நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள தான்வரின், “நான் இங்கு அலங்கரிக்க வரவில்லை. தாய்லாந்தில் புதிய அரசியல் வரலாற்றை எழுத வந்துள்ளேன்.

நான் என் வாழ்நாள் முழுவதும் இரண்டாம் தர குடிமக்கள் போலவே நடத்தப்பட்டேன். நான் என்னை இங்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனக்கு எம்.பி சீட்டு கிடைத்தபோது பலர் என்னை கேலிப்பொருளாகத்தான் பார்த்தனர்.

நாடாளுமன்றத்தில் பொழுதைப் போக்குவதற்கு நான் வருவதாக சிலர் எண்ணினர். நான் இங்கு பொழுதுபோக்க வரவில்லை.

நான் இப்போது இங்கு நிற்கிறேன் என்றால் என்னை மக்கள் தேர்ந்தெடுத்ததால் வந்துள்ளேன். நானும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சமமான நபர்தான்.

நான், எனது 17 வயது வரை ஒரு பெண்ணாக இருக்கவே நிர்பந்திக்கப்பட்டேன். பெண்ணைப் போன்றே உடைகளை உடுத்தி இருந்தேன். ஆனால், நான் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்க விரும்பவில்லை.

பள்ளிக்கூடங்களில் நீங்கள் அமர்ந்திருக்கும்போது உங்கள் பாடப்புத்தகங்களில் திருநங்கைகள் மனச் சோர்வுள்ளவர்கள் (mentaly upnormal) எனக் குறிப்பிடிருந்தால் நீங்கள் எப்படி மற்றவர்களை அணுகமுடியும். சட்டத்திலும், பள்ளிப்புத்தகத்திலும் சில மாறுதல்கள் தேவை. தாய்லாந்து மக்கள் எங்கள் சமூகத்தினரை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், எங்களைச் சமமாக மதிப்பதில்லை, சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, தொழிலதிபர்களாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

குறைவான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு பணியாற்றவும் வற்புறுத்தப்படுகின்றனர். எளியவர்களின் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்” என்றார்.


Recommended For You

About the Author: Editor