முஸ்லிம் பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புர்கா அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

முகத்திரை தடை நீக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் முகத்திரை அணிந்து காலிமுகத்திடலுக்கு சென்ற நான்கு பெண்கள் கைது செய்யப்பட்ட போது முகத்திரை தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

இது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா சார்பில் பிரச்சாரக் குழு செயலாளர் அஷ்-ெஷய்க் எச்.உமர்தீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆடைச் சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எமது நாட்டின் யாப்பின் பிரகாரம் அனைவருக்கும் அச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம்.

இந்நிலையில் நாட்டில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து அசாதாரணநிலை காணப்பட்டதுடன் அவசர காலசட்டமும் அமுல் செய்யப்பட்டது.

அவசரகாலசட்டத்தின் போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டது.

எனினும் கடந்த (23/08) ஆம் திகதியுடன் அவசரகாலசட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கும் விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் நாட்டு மக்களின் அச்சமும் மனோபாவமும் முழுமையாக மாறியதாக தெரியவில்லை.

இந்நிலையில் முஸ்லிம் சகோதரிகள் முகத்திரை அணிந்து வெளியேறும் போது பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் இன வாத சக்திகளுக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொள்வது எமது பொறுப்பாகும்.

எனவே முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும் காலநேர சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு புத்திசாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்துகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாஅனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

எமது அவதானமான செயற்பாடுகள் எமது உரிமைகளை உரிய முறையில் பாதுகாக்க நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு உலமா சபைக்கு இருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த மதச் சுதந்திரமும், உரிமைகளும், கலாசாரமும் தொடர்ந்தும் பாதுகாக்கப் படவேண்டும் என்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடாகும்”

என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor