உடையும் எடப்பாடியின் ஒப்பந்த மர்மம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 1) தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்படுகிறார்.

இங்கிலாந்து நாட்டில் அவர் சென்ற முதலில் நாளில் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டு, கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் அமைய இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தள்ளாடி வருவதை உலகின் சிறந்த பத்திரிகையான தி கார்டியன் பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில், லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம் என்ற தலைப்பில் முதன் முதலாக செய்தி வெளியிட்டோம்.

இந்நிலையில் தமிழக முதல்வர் இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் மேற்கொண்ட இன்னொரு ஒப்பந்தம் பற்றி இப்போது பார்ப்போம்.

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் சர்வதேச திறன் மேம்பாட்டுக் கழகம் என்பது, இன்றைய கார்ப்பரேட் உலகம் எதிர்பார்க்கும் அளவுக்கு பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு வகையிலும் பயிற்சியளிக்கும் சர்வதேச நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை கல்விக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஐ.எஸ்.டி.சி. பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அளித்து வருகிறது.

பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில்முறை மற்றும் தொழிற்கல்வி நடவடிக்கைகள், உயர் கல்வி கூட்டாண்மை, தொழில்முறை மற்றும் கார்ப்பரேட் பயிற்சி, ஆலோசனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பிற கற்றல் தீர்வுகள் ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழகத்தில் மாநில திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை இருக்கின்றன. இவை செய்வதைதான் லண்டனில் இருக்கும் சர்வதேச திறன் மேம்பாட்டுக் கழகம் செய்கிறது. ஆனால் தமிழக அரசு இவர்களைத் தேடிப் போய் ஒப்பந்தம் செய்துகொண்டது ஏன், என்பது பற்றி தமிழக அரசு இதுவரை விளக்கவில்லை.

மேலும் ஐ.எஸ்.டி.சி. யின் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அந்த நிறுவனத்துக்கு தமிழக அரசுதான் கட்டணம் செலுத்த வேண்டுமேயன்றி, தமிழகத்தில் அந்த நிறுவனம் எந்த முதலீடும் செய்வதற்கு எந்த வாய்ப்புமில்லை என்கிறார்கள் தேசிய திறன் மேம்பாட்டுக் கழக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்துக்கு செலவுதானே ஒழிய வரவு என்பது எந்த அடிப்படையில் வரும் என்பதும் கேள்விக்குறியே.

மேலும் ஐஎஸ்டிசி எனப்படும் இந்த சர்வதே திறன் மேம்பாட்டுக் கழகத்தோடு உலகம் பூராவும் இருக்கும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளிகள், என்.ஜி.ஓக்கள், கோச்சிங் நிறுவனங்கள், கல்லூரிகள் போன்றவை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் ஐஎஸ்டிசியோடு திறன் மேம்பாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

எங்களின் இந்திய பார்ட்னர்கள் என்று ஐஎஸ்டிசி தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்… கோவை நேரு கலை அறிவியல் கல்லூரி, பெண்கள் கிறித்துவக் கல்லூரி சென்னை, லயோலா கல்லூரி, டாக்டர் எம்.ஜிஆர் கல்வி, மருத்துவ நிலையம், பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சி, ரத்தினம் கல்லூரி கோவை, எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் சென்னை, விஐடி பல்கலைக் கழகம் வேலூர் போன்ற தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் ஐஎஸ்டிசியோடு ஏற்கனவே ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

இந்த கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் எல்லாம் லண்டனுக்கு சென்றா ஒப்பந்தம் போட்டார்கள்? இதுபோன்று மருத்துவப் பணியாளர் மேம்பாடு தொடர்பாக மட்டும் தமிழக அரசு ஐஎஸ்டிசியோடு ஒப்பந்தம் செய்ய லண்டன் சென்று, அதுவும் தமிழக முதல்வர் சென்று வர வேண்டுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

எனவே இந்த இரண்டாவது ஒப்பந்தத்திலும் தமிழகத்துக்கான ‘முதலீடு’ எங்கே இருந்து வரும் என்பது மிகப் பெரிய கேள்வியாக நம் முன்னே நிற்கிறது.


Recommended For You

About the Author: Editor