லண்டன் பறந்த தனுஷ் டீம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்காகப் படக்குழு லண்டன் சென்றுள்ளது.

தனுஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாராகி வருகின்றன. வெற்றி மாறன் இயக்கும் அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் மஞ்சு வாரியர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளிவரவுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், ராம்குமார் ஆகியோர் இயக்கத்தில் தனுஷ் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். அந்தப் படங்களின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்து இருவரும் மற்ற படங்களில் ஒப்பந்தமானதால் இந்தக் கூட்டணி அமைவது தள்ளிப்போனது. தற்போது இவர்கள் இணையும் படத்தை சசிகாந்த் தயாரிக்கிறார். ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார்.

கேங்ஸ்டர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம், லண்டனைக் களமாகக்கொண்டு தயாராகவுள்ளது. தற்போது கார்த்திக் சுப்புராஜ், சசிகாந்த், ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர். எனை நோக்கி பாயும் தோட்டாவின் சில காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டு தனுஷும் லண்டன் கிளம்புகிறார்.
படத்தை பட்ஜெட்டுக்குள் முடிப்பதற்காக ஒரே கட்டப் படப்பிடிப்பில் படத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor