சாகச மந்திரக்காரனின் சர்வதேச பயணம்!

தனுஷ் நடித்த ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜெர்னி ஆப் பகிர்’ என்ற பிரெஞ்ச்- ஆங்கிலத் திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கான பக்கிரி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்தப் படம், ரோமன் பியுர்டோலஸ் எழுதிய நாவலின் திரைவடிவமாகும். மும்பையிலிருந்து பாரிசுக்கு தன் தந்தையை தேடிச்செல்லும் ஒரு தெரு வித்தைக்காரர் பற்றிய கதையான இப்படம் உலகம் முழுவதும் குடியேறியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுகிறது. தெரு வித்தைக்காரராக தனுஷ் நடித்துள்ளார்.

ஐரோப்பாவில் வெளியான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. மேலும், பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நகைச்சுவைப் படத்திற்கான ரசிகர்களின் விருதையும் பெற்றுள்ளது.

ஜூன் 21 ஆம் தேதி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் இப்படத்தின் சுவாரஸ்யமான டிரெய்லர் இன்று காலை வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ராஜகுமரகுரு லட்சுமிபதி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் வரும் தனுஷ் மும்பை நகரின் சேரி பகுதியில் வித்தைசெய்யும் ஒரு மேஜிக் நிபுணராக நடித்துள்ளார். தன் தந்தையை தேடி பாரிஸ் செல்லும் தனுஷ், வெளி நாடுகளில் சந்திக்கும் மனிதர்கள், மரியா என்ற வெளி நாட்டு பெண் மீது ஏற்படும் ஈர்ப்பு, குடியேறியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சாகசங்கள் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது இந்த டிரெய்லர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் வெளியிடுகிறது. அமித் திரிவேதி இசையமைத்த பாடலுக்கு, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor