
கிச்சா சுதீப் நடித்த பயில்வான் படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கன்னட இயக்குநர் எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் படம் பயில்வான்.
குத்துச் சண்டைவீரராக சுதீப் நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாகவும், ஆகாங்க்ஷாசிங் கதா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
சுமார் ரூ . 45 கோடிக்கும் மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படம் கன்னடத்தின் அதிக பட்ஜெட் படமென்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஜனவரி மாதம் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பயில்வான் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்று வரும் இதன் போஸ்டரில் சுதீப் ஆக்ரோஷமாய் சண்டையிடுவது போலுள்ளது.
ஆர்ஆர்ஆர் மோஷன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.
விரைவில் கன்னடம்-தெலுங்கு-இந்தி-தமிழ்-மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது.