
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கத் தனி நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.கே.நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்று தீபக் தீபா சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், கிருபாகரன் அமர்வு, ஜெ. சொத்து விவகாரத்தில் வழக்குத் தொடர்ந்தது குறித்து தீபக், தீபா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி இருவரும் இன்று (ஆகஸ்ட் 30) நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று சொன்ன ஜெயலலிதாவின் சொத்துக்கள் சிலவற்றை ஏன் ஏழைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது, ஜெ. இறந்தவுடனேயே ஏன் சொத்துக்களுக்கு உரிமை கோரி வழக்குத் தொடரவில்லை என்று அவர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குத் தீபா தரப்பில், ஜெ. சொத்துக்களில் சிலவற்றை ஏழைகளுக்குக் கொடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் போயஸ் தோட்டம் உள்ளிட்ட ஜெ.வின் சில சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
என்னை அனுமதிக்காததாலே அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. தீபக் தரப்பில், வாரிசு சான்று கோரி விண்ணப்பித்திருந்ததால், தன்னை நிர்வாகியாக நியமிக்க கோரி வழக்கு தொடர காலதாமதம் ஏற்பட்டதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து போயஸ் தோட்டத்தில் தீபக், தீபா இருவரையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.