சஜித்திற்கு எச்சரிககை விடுக்கும் சரத்!!

ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஐக்கிய தேசிய முன்னணியினதும் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான். அவரின் சொல்லைக் கேட்காதோர் கட்சியைவிட்டு உடன் வெளியேற வேண்டும்.

அதைவிடுத்துக் கட்சிக்குள் இருந்து கொண்டு பிடிவாதம் பிடிப்பதில் – குழப்பம் ஏற்படுத்துவதில் – மிரட்டல் விடுவதில் எவ்வித பயனையும் அவர்கள் அடையப்போவதில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை தலைமை ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அறிவிக்கத் தவறினால், சஜித் ஆதரவு அணியைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனி வழியில் பயணிக்கத் தயாராக இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தைப் பிரதமரின் கவனத்துக்கும் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன?’ என்று சரத் பொன்சேகாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுப்பார்.

அதற்கிடையில் ஒரு அணியினர் சஜித் பிரேமதாசவின் பெயரை மட்டும் உயர்த்திப் பிடித்தவாறு அவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று பரப்புரை செய்து வருகின்றனர். அவர்களைத் தவிர பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரணிலுடன் இணைந்து கட்சிக்காகச் செயற்படத் தயாராக உள்ளனர்.

கட்சிக்குள் இருந்து குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதே நல்லதென நான் நினைக்கிறேன். அவர்கள் வெளியேறினால் எம்மால் கட்சியைப் பலப்படுத்த முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைத்துவத்தையும், கட்சியின் கொள்கையையும் மீறியே செயற்பட்டு வருகின்றார். கட்சியின் கொள்கையை மீறிச் செயற்படும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்


Recommended For You

About the Author: Editor