புத்தளத்தில் சூறாவளி!!

புத்தளத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பாரிய மரங்களும் முறிந்துள்ளன.

இதன் காரணமாக பிரதேசத்தில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தின் மகாகும்புகக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டிகம- புத்தியாகம பகுதியிலேயே இன்று (சனிக்கிழமை) அதிகாலை இவ்வாறு மினி சூறாவளி வீசியுள்ளது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த பிரதேசத்தை ஊடறுத்து வீசிய கடுங்காற்று காரணமாக 26க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்போது காயமடைந்த ஒருவர், ஆனமடு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் மின்சாரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கு இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்தோடு, சேத விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளும் பிரதேச செயலக அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor