ஐ.நா. அணு ஆயுத சோதனைக்கு தடை!!

அணு ஆயுத சோதனைகளுக்கு தடை விதிப்பதற்கான ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குடெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினத்தைமுன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையிலே இதுகுறித்து கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, ”கடந்த 70 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

‘விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்’ கடந்த 1996ல் கையெழுத்தாகி கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னமும் முழுமையாக அமலுக்கு வரவில்லை.

சீனா, எகிப்து, ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அதனை அமுல்படுத்த சம்மதம் தெரிவிக்கவில்லை. வடகொரியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும். ஏற்கெனவே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவது, நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் பேரழிவை ஏற்படுத்தும்” என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத சோதனை தடுப்பு நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதியை ‘அணு ஆயுதப் பரிசோதனைகளுக்கு எதிரான சர்வதேச நாளாக’ ஐ.நா. சபை அனுசரிக்கிறது.

இதைப்போலவே சி.டி.பி.டி. என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ‘பரந்துபட்ட அணுப் பரிசோதனை தடுப்பு ஒப்பந்தம்’ 1996ம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று ஐ.நா. பொதுச்சபையால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor