ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைப்பா!!

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்படலாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

குறித்த மூவருக்கும் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு இல்லாதமையினால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் எனும் போர்வையில், தேர்தலை தாமதப்படுத்தலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே நிஸாம் காரியப்பர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அரசாங்கம் திரைமறைவில் முயற்சிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகையால் இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதனை வன்மையாக எதிர்ப்போம்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பில்லை. இதனால் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அவர்களுக்குள் உடன்பாடு எட்டப்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.

அந்தவகையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உறுதி செய்யப்படலாம். அவ்வாறாயின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே இதனைச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்கும்.

மேலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாமல் தாமதமடைவதற்கு வாய்ப்புள்ளது.

ஆகையால் இத்தகைய செயற்பாடு இடம்பெறுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor