
இலங்கையில் முதன்முறையாக தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் கல்வித்துறையில் புரட்சிகர அபிவிருத்தி பயணத்தின் மற்றுமொரு கட்டமாக இந்த கல்வியியல் கல்லூரி அமையவுள்ளது.
தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று குளியாப்பிட்டியில் நடைபெறவுள்ளது.
பாடசாலை கட்டமைப்பில் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
குளியாப்பிட்டி நாரங்கல பிரதேசத்தில் 16 ஏக்கர் விஸ்தீரணமான காணி இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய கல்வியியல் கல்லூரி வரலாற்றில் இணைந்து கொள்ளும் 20ஆவது கல்லூரி இதுவாகும்.
கொரிய அரசாங்கம் இதற்கென 2500 மில்லியன் ரூபாவை வழங்குவதோடு இலங்கை அரசாங்கமும் இதற்கென 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 2022ம் ஆண்டளவில் தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரி திறக்கப்படவுள்ளது.