லெபனான் நோக்கி ஈரான் எண்ணெய்க் கப்பல்!!

பிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் அட்ரியன் டாரியா லெபனான் நோக்கி பயணிப்பதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் கவ்ஸோக்லு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாகக் கூறி ஈரானின் எண்ணெய் கப்பலை பிரித்தானிய தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரில் இங்கிலாந்து கடற்படை இரு மாதங்களுக்கு முன்பு கைப்பற்றியது. இந்தக் கப்பல் கடந்த ஒகஸ்ட் 15ம் திகதி விடுவிக்கப்பட்டது.

இது குறித்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், ”நாங்கள் இன்னும் ஈரானிடமிருந்து எரிவாயுவை வாங்குகிறோம், ஆனால் நாங்கள் எண்ணெய் வாங்குவதில்லை. அட்ரியன் டாரியா கப்பலை (முன்பு கிரேஸ் 1 என்று அழைக்கப்பட்டது) நாங்கள் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், லெபனான் நோக்கி செல்லும் அட்ரியன் டாரியா அங்கிருந்து வேறு எங்கு செல்லும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இதையடுத்து அட்ரியன் டாரியா எனப்படும் இந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் துருக்கியில் உள்ள முக்கிய எண்ணெய் முனையமான மெர்சின் துறைமுகம் நோக்கி செல்வதாக அதன் தானியங்கி அடையாள அமைப்பு தரவு தளத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

130 மில்லியன் டொலர் மதிப்புள்ள 2.1 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய மசகு எண்ணெய் இந்த கப்பலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor