சப் டைட்டில் சர்ச்சை: லைகா பணத்தை மறுத்த ரேக்ஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆனால் படத்தில் சப் டைட்டில் பணிகளை மேற்கொண்ட தனது குழுவுக்கு சம்பளம் தரவில்லை என்று ரேக்ஸ் என்பவர் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து பட நிறுவனத்திடம் கேட்டும் அவர்கள் தரப்பில் எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் லைகா நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், “லைகா தயாரிக்கும் அனைத்துப் படங்களுக்கும் ரூ.50,000த்தை சப்-டைட்டிலுக்காக ஒதுக்குகிறது. அந்தப் படம் எந்த பட்ஜெட்டில், எப்படித் தயாரிக்கப்படுகிறது என்றாலும் இதே அளவுதான். ஏனென்றால் தொழில்நுட்ப ரீதியில் அதை முடித்துக் கொடுப்பதற்கான வசதி லைகாவிடமே இருக்கிறது.

திருமதி ரேக்ஸ், ’2.0’ படத்துக்கான சப்டைட்டில் பணிக்கு இரண்டு லட்சம் கேட்டார். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவர் சொந்த விருப்பத்தில் இந்த வேலையைச் செய்து முடித்து, பணம் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொன்னார். பின்னர் அவர் தொடர்புகொண்டு சொன்ன கட்டணம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். பத்து நாட்களுக்கு முன் ரேக்ஸை தொடர்பு கொண்டு ஒரு லட்சம் பணம் தருவதாகச் சொன்னோம். அது நாங்கள் ஒப்புக்கொண்ட பட்ஜெட்டில் இல்லை. ஆனால் நாட்கள் கடந்து விட்டதால், நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்தப் பணம் எங்களுக்கு நியாயமாகப்பட்டது.

ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு லட்சம் கேட்டார். அது கண்டிப்பாக மார்கெட்டில் மற்றவர்கள் வாங்கும் கட்டணம் அல்ல. ஒரு தயாரிப்பு நிறுவனமாக நாங்கள் பல வகையில், பல விதமான பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கிறோம். நாங்கள் சம்பளம் தராமல் விட்டதில்லை.

வழக்கத்தில் இருப்பது போலப் பேரம் பேசுவோம். ஆனால் ரேக்ஸின் இந்த குற்றச்சாட்டு எங்கள் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கத்துடன் சொல்லப்பட்டுள்ளது. அவர் இதை பொதுவில் கொண்டு வந்து விட்டதால் நாங்களும் ஒரு லட்சம் ரூபாய் தரத்தயாராக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பேசியுள்ள ரேக்ஸ், “அக்டோபர் 5ஆம் தேதி, 2018ஆம் ஆண்டு நான் எனது வேலை தொடர்பான கடிதத்தை அனுப்பினேன். அதில் தமிழிலிருந்து சப் டைட்டில் செய்ய 1 லட்சம் ரூபாயும், டைம் கோடிங் செய்ய 25,000 ரூபாயும், மற்ற மொழிகளில் பயன்படுத்துவதற்கு 40 முதல் 60% கட்டணமும் என மொத்தமாக 2.05 லட்சம் கேட்டிருந்தேன். அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்னிடம் எப்படி பொறுப்பை கொடுப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“இது பணம் சம்மந்தப்பட்டது அல்ல, தயாரிப்பாளர்கள் உடனே பணம் கொடுக்க முடியாது என்பது தெரியும், அதனால் வெளியீடு வரை பொறுமையாக இருந்தேன். நான் இலவசமாக பல குறும்படங்களுக்கு சப் டைட்டில் செய்துகொடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் லைகாவிடமிருந்து ஒரு நயா பைசா கூட வேண்டாம் என்று ரேக்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor