
இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, புதிய சாதனையொன்றை படைக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்.
இந்தியக் கிரிக்கெட் அணி, தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இதில் முதல் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அந்த போட்டியில் இந்தியா அணி அபார வெற்றிபெற்றது.
இந்த நிலையில் தற்போது, இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா அணி வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
அவ்வாறு இந்த டெஸ்ட் தொடரை இந்தியா அணி, கைப்பற்றிவிட்டால், அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய தலைவர் என்ற மகத்தான சாதனையை விராட் கோஹ்லி பதிவு செய்வார்.
மகேந்திர சிங் டோனி தலைமையில், இந்தியா அணி 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 15 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
இதற்கமைய தற்போது அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய தலைவராக டோனி உள்ளார். இந்த சாதனை முறியடிக்க தற்போது கோஹ்லி தயாராகவுள்ளார்.
விராட் கோஹ்லி தலைமையில் இந்தியா அணி 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றியையும், 10 போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 10 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
இந்த சாதனையை விராட் கோஹ்லி முறியடிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்…