50 டொலர்களை திருடியவர் 36 வருடம் சிறையில்

உணவகம் ஒன்றிலிருந்து 50 அமெரிக்க டொலர்களை திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அலபாமா மாகாண நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அல்வின் கென்னார்ட் என்ற குறித்த கறுப்பினத்தவர் 1983ஆம் ஆண்டு, தனது 22 ஆவது வயதில் உணவகம் ஒன்றுக்குள் கையில் கத்தியுடன் நுழைந்து கொள்ளையடித்த குற்றத்திற்காக பிணையில்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தின்போது அவர் யாரையும் தாக்கவோ அல்லது காயப்படுத்தவோ இல்லை.

அன்றைய காலத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட அல்வினுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனாலும், 36 வருடங்களுக்கு பின்னர் 58 வயதான அல்வின் தற்சமயம் அலபாமா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அல்வின் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தவுடன் அங்கு கூடியிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உணர்ச்சி மிகுந்து காணப்பட்டனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி கார்லா க்ரவுடர், ‘இந்த வாய்ப்பைக் கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். அல்வின் இனி அவரது குடும்பத்தினரால் கவனிக்கப்படுவார்’ என்று கூறினார்.

தான் கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்துகொண்டிருந்த தச்சு வேலையை மீண்டும் தொடருவதற்கு அல்வின் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்