பாகிஸ்தான் நீதித்துறையின் கருப்பு நாள்

பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக் (நவாஸ்) அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராணா சனவுல்லா மீது போதை பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

லாகூர் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி மசூத் அர்சத் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராணா சனவுல்லாவின் காரில் இருந்து 15 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்வது தொடர்பான வீடியோ காட்சியை பார்த்தார். ஆனால் அதில் ஹெரோயின் பறிமுதல் செய்வதை உறுதிப்படுத்துவதாக எந்த காட்சியும் இல்லை. இதனால் ராணா சனவுல்லாவுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது திடீரென நீதிபதி மசூத் அர்சத்துக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஒரு உத்தரவு வந்தது. அதில் அவர் லாகூர் உயர் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கு விசாரணையை உடனே நிறுத்துமாறும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே விசாரிப்பதை அவர் நிறுத்திவிட்டார்.

இதுகுறித்து நீதிபதி கூறுகையில், “நான் கடவுளுக்கு மட்டுமே பதில் கூற கடமைப்பட்டு இருக்கிறேன், இந்த வழக்கில் யார் ஈடுபட்டு இருக்கிறார் என்பதில் பாகுபாடு இன்றி முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் மூத்த சட்டத்தரணி ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. ராணா மீது போடப்பட்டது போலி வழக்கு. அவருக்கு சாதகமாக பிணை கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், அவர்கள் இவ்வாறு செய்து உள்ளனர். இது நீதித்துறையின் கருப்பு நாள்” என்றார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தித் தொடர்பாளார் மரியம் அவுரங்கசிப் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “ராணாவின் வழக்கை விசாரித்த நீதிபதியை மாற்றி, பிரதமர் இம்ரான்கான், நீதித்துறை மீது கடுமையான தாக்குதலை தொடுத்து இருக்கிறார்”, என்று குற்றம் சாட்டினார்


Recommended For You

About the Author: ஈழவன்