நல்லூரில் திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிப்பு

நல்லூர் கந்த சுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களின் நகைகளைத் திருடி இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டை உரிய முறையில் முன்வைக்க பொலிஸார் தவறியதால் சந்தேகநபர்களை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வியாழக்கிழமை தேர்த் திருவிழா இடம்பெற்றது. அதில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதன்போது இருபதுக்கும் மேற்பட்டோரிடம் நகைகள் அபகரிக்கப்பட்டிருந்தன. சுமார் 45 தங்கப் பவுண் நகைகள் திருட்டுப் போயிருந்தன என்று முறைப்பாடுகள் கிடைத்தன என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்தத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் முழங்காவிலைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பொலிஸாரின் கைதுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல், சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன் வழக்கை ஒத்திவைத்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்