இந்திய ரி.20 அணியில் இளம் வீரர்கள்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடும், இந்திய அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம், இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்கா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடரில் முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடருக்கான, எதிர்பார்ப்பு மிக்க இந்திய அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்த அணி, பெரும்பாலும் இளம் வீரர்களை கொண்ட அணியாகவே அமைந்துள்ளது.

சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா, மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிற்கு பிறகு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ரி-20 தொடரில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பதிலாக தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர கலீல் அஹட்டுக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் டோனி, இரண்டு மாத கால ஓய்வில் இருப்பதால், இத்தொடரிலும் இருந்து அவர் விலகியுள்ளார். இதற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரில் அவர் விளையாடவில்லை.

டோனிக்கு பதிலாக வழமை போலவே இளம் விக்கெட் காப்பாளரான ரிஷப்பந்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கும் அணியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர்களான வொஷிங்டன் சுந்தர் மற்றும் குர்ணல் பாண்ட்யா ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் சர்மா, ஷிகர் தவான். கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பான்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குர்ணல் பாண்ட்யா, வொஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், காலீல் அஹமட், தீபக் சஹார், நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்