பூமியின் மிகவும் வேகமான பெண் என பெயரெடுக்க விரும்பியவர் பலி.

‘பூமியின் மிகவும் வேகமான பெண்’ எனப் பெயரெடுக்க காத்திருந்த பிரபல கார்ப்பந்தய வீராங்கனை ஜெஸ்ஸி கொம்ப்ஸ் தனது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல கார்ப்பந்தய வீராங்கனையும் தொலைக்காட்சிப் பிரபலமுமான ஜெஸ்ஸி கொம்ப்ஸ், ‘நான்கு சக்கரங்களில் வேகமான பெண்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

‘பூமியின் மிகவும் வேகமான பெண்’ என்ற பெயரை எடுக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்துள்ளது.

இந்நிலையில், 39 வயதான ஜெஸ்ஸி, சாதனை படைக்கும் முயற்சியில் ஒரேகன் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஜெட் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனாலும், மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

கடந்த 2013 ஆம் ஆண்டு மணிக்கு 641 கிலோமீற்றர் வேகத்தில் காரைச் செலுத்தியதன் மூலம் ஜெஸ்ஸி, ‘நான்கு சக்கரங்களில் வேகமான பெண்’ என்ற பட்டத்திற்குச் சொந்தக்காரியானார்.

இந்தச் சாதனையை முறியடித்து ‘பூமியின் மிக வேகமான பெண்’ எனப்பெயர் எடுக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்துள்ளது. அதற்கான முயற்சிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் சண்டைப் பயிற்சி வீராங்கனையான கிற்றி ஓ நெய்ல் என்பவரே உலகில் அதிவேகமான காரைச்செலுத்திய பெண்ணாவார்.

அவர் கடந்த 1976 ஆம் ஆண்டு மணிக்கு 824 கிலோமீற்றர் என்ற வேகத்தில் காரைச் செலுத்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Recommended For You

About the Author: ஈழவன்