முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம்

குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகியன ஒன்றிணைந்து தரவுத் தொகுதிகளை தொடர்புபடுத்தி இந்த பொலிஸ் தொடர்பாடல் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. அதற்கமைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சட்டத்தின் பிடியிலிருந்து விலகிச் செல்பவர்கள் பற்றிய தகவல்கள், இந்த கட்டமைப்பிற்கு உட்படுத்தப்படுவதுடன், எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் எவ்விடத்திலிருந்தும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியின் ஊடாக அக் கட்டமைப்புடன் தொடர்புகொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனூடாக குற்றவாளிகளை துரிதமாக சட்டத்தின் முன்கொண்டு செல்லவும் போக்குவரத்து குற்றங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கிடையே நேற்று (29) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் திணைக்களத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் அதன் மனித வள மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து சிறந்த பண்புடனான தரமான பொலிஸ் சேவையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், அதன் கீழ் இந்த புதிய வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே புகையிரதக் கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களை குறைப்பதற்கு முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தற்போது நாட்டில் பாதுகாப்பு வேலிகளைக் கொண்ட புகையிரதக் கடவைகள் 280காணப்படுவதுடன், 344கடவைகளில் மணியடித்தல் மற்றும் மின்விளக்கினை ஒளிரச் செய்யும் முறை பயன்பாட்டில் உள்ளது.

மீதமுள்ள 539 புகையிரதக் கடவைகளிலும் மணியடித்தல் மற்றும் மின்விளக்கை ஒளிரச் செய்யும் முறையை விரைவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் அர்ஜுன ரனதுங்க, பதில் கடமை பொலிஸ் மாஅதிபர் சீ.டீ. விக்கிரமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


Recommended For You

About the Author: ஈழவன்