‘அடிமைகளைப் போல நடத்தப்படும்’ ஜேர்மன் இளைஞர்கள்!

சமூகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகளில் வாழும் இளைஞர்களுக்கு உதவும் ஒரு திட்டத்தின் கீழ் ஜேர்மனிய சிறார்கள் ருமேனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு அடிமைத்தனம் போன்ற நிலைமைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டவியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜேர்மனிய அரச நிதியுதவி பெற்ற ‘புரோஜெக்ட் மராமுரேஸ்’ ஊடாக இளைஞர்கள் மற்றும் சிறார்களை கடத்தி துஷ்பிரயோகம் செய்ததாக ஜேர்மனிய தம்பதியர் உட்பட எட்டு சந்தேக நபர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பெரும்பாலான பதின்ம வயதினர் மற்றும் சிறார்கள் மனிதாபிமானமற்ற, இழிவான முறைகளில் நடத்தப்பட்டதாக சட்டவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக ஜேர்மனிய அதிகாரிகள் ருமேனிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், சமூகத்தில் பின்னடைவை எதிர்கொண்ட இளைஞர்களுக்கு “மறுவாழ்வு” வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று புரோஜெக்ட் மராமுரேஸின் இணையத்தளம் கூறுகின்றது

பெரும்பாலும், இந்த திட்டம் நன்னடத்தை பிரச்சினைகள், போதைப் பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உதவுகின்றது.

அதன்படி, வடக்கு ருமேனியாவின் மராமூர்ஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு பண்ணையில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் உளவியல் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்கு பதிலாக 12 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் ருமேனிய புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.


Recommended For You

About the Author: Editor