ஜனாதிபதி முக்கிய பணிப்புரை!!

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கின் நில விடுவிப்பு தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்தபோது, வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக கடந்த 05 வருட காலமாக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

முப்படையினருடன் இணைந்து வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு விடுவிக்கக்கூடிய அனைத்து நிலங்களையும் துரிமாக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் அது தொடர்பான அறிக்கையொன்றினை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதிக்கு முன்னர் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவ முகாம்கள் அவசியமாகும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஈஸ்டர் தாக்குதல் அதற்கான ஒரு அனுபவமாக அமைந்ததுடன், பிரதேசத்தினதும் மக்களினதும் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு முகாம்கள் காணப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

விடுவிக்கக்கூடிய அனைத்து நிலங்களையும் விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, பேச்சுவார்த்தைகளினூடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று தனியார் காணிகள் இராணுவ முகாம்களுக்காக தேவைப்படுமாயின் அந்நிலங்களுக்கான நட்டஈடு வழங்குதலை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்பு துறைகளால் கையகப்படுத்தப்பட்ட வடக்கு மாகாண நிலங்களில் 80.98 சதவீத அரச காணிகளும் 90.73 சதவீத தனியார் காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறையினரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை பிரதானிகள் கலந்துகொண்டனர்.


Recommended For You

About the Author: Editor