அமேசன் தீயால் பருவநிலை பாதிப்பு -விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

அமேசன் காடுகளை சாம்பலாக்கிவரும் தீ, பருவநிலை மாற்றங்கள் தொடர்பான நெருக்கடியை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், வானிலிருந்து எடுக்கப்பட்ட காட்டுத் தீ தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமேசன் காடுகளில் பரவிவரும் தீயானது சூழலியல் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச அரசியல் அரங்கிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

அமேசன் காடுகளின் பெரும்பகதியான பரப்பினை கொண்டுள்ள பிரேசில் நாட்டினுடைய கவனயீனம் காரணமாகவே குறித்த காட்டுத்தீ பரவியுள்ளதாக சர்வதேச ரீதியாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஆண்டுதோறும் வறண்ட காலங்களில் வழக்கமாக ஏற்படும் தீதான் என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கூறுகிறார்.

இந்த நிலையில், வனங்களை அழித்து கால்நடைகளுக்கான நிலங்களாக மாற்றுவதற்கு சாதகமான அரசின் கொள்கையே இதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாட்டிறைச்சிக்கான கேள்வி உலகளவில் விரிவடைந்து வரும் நிலையில், பண்ணை வளர்ப்புக்களை அதிகரிப்பதற்காகவும், அதன் மூலம் இலாபமீட்டுவதற்காகவும், உலகின் பல காடுகளுக்கு திட்டமிட்டு தீ வைக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அதன் நீட்சியாகவே அமேசன் காடுகளில் பரவிவரும் இத்தீ பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நிமிடமும் ஒரு கால்பந்து மைதானம் அளவிலான காடு எரிந்துகொண்டே வருகின்றமை அதிர்ச்சியினையும் கவலையினையும் ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை, காடுகள் அழிய அழிய, அவற்றால் தக்கவைக்கப்படும் ஈரப்பதம் குறைந்து, நிலமும் வறண்டுபோகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியுமா, காடுகளை மீட்டமைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுவதுடன், வார்த்தைகளால் விவரிக்க முடியாத இயற்கையின் அழகையும், பூமியின் நுரையீரல் என்று சொல்லப்படும் அளவுக்கு பயனையும் கொண்டுள்ள அமேசான் காடுகளின் அழிவு விரைவில் தொடங்கலாம் என விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor