மன்னாரில் போராட்டம்!

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அரசபடைகள் நிலைகொண்டுள்ள மக்களின் காணிகளை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.பெனடிக் குருஸ் தலைமையில்  இன்று (புதன்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் நல்லாட்சி அரசிற்கு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி அரச படையினர் வசமுள்ள காணிகளை ஜனாதிபதி விரைவில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

எதிர்வரும்  30ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவான வாக்குறுதி ஒன்றை வழங்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் காணிகளை இழந்தவர்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய ஆவண தொகுப்பும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் மக்களின் கோரிக்கை நியாயமானது என தெரிவித்தார். அத்தோடு குறித்த மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை, சிலாவத்துறை, முள்ளிக்குளம், கொண்டச்சிகுடா உட்பட மக்களின் காணிகள் பல தற்போதுவரை அரச படையினர் வசமுள்ளதுடன் இக்காணிகளை விடுவிக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பல வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor