வெளிநாட்டவரை தாக்கியவர் விளக்கமறியலில்

வெளிநாட்டவர் ஒருவரைத் தாக்கி அவரது அலைபேசி மற்றும் 54 ஆயிரம் பணம் என்பவற்றை அபகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை வரும் செப்ரெம்பர் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

“வெளிநாட்டவரையே தாக்கி – அச்சுறுத்தி அவரது உடமைகளை அபகரிக்கும் நீர், நம் நாட்டவர்களை சும்மாவா விடுவீர். வெளிநாட்டவர்கள் இங்குள்ளவர்களை நம்பியே சுற்றுலாப் பயணம் வருகின்றனர்” என்று சந்தேகநபரை நீதிவான் கண்டித்தார்.

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து மீட்ட அலைபேசியை உரிய வெளிநாட்டவரிடம் மீள வழங்கிய மன்று, விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

சுற்றுலாப் பயணியாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிருந்த வெளிநாட்டு ஒருவரைத் தாக்கிய ஒருவர் அவரது அலைபேசி மற்றும் 54 ரூபா பணத்தை அபகரித்துத் தப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டவர் முறைப்பாடு வழங்கினார். அவரது முறைப்பாட்டையடுத்து சிசிரிவி கமரா பதிவு ஊடாக கொள்ளையரை அடையாளம் கண்ட பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

பண்டத்தரிப்பு பனிப்புலத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டவரிடம் அபகரித்த அலைபேசி மீட்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டார். முறைப்பாட்டாளரான வெளிநாட்டவரும் மன்றில் முன்னிலையானார்.வழக்கை விசாரித்த நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை கண்டித்ததுடன், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன், வெளிநாட்டவரின் அலைபேசியை மீள வழங்கவும் மன்று அறிவுறுத்தல் விடுத்தது. மன்றின் முன்னிலையில் வெளிநாட்டவரிடம் அலைபேசி மீள ஒப்படைக்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்