நாடு திரும்பிய தங்க மங்கை!

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற பி.வி.சிந்து நள்ளிரவு டெல்லி வந்தடைந்தார், அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் நகரில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சிந்து ஜப்பானைச் சேர்ந்த நஸோமி ஒகுஹாராவிடம் மோதினார்.

போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே, நஸோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் சாம்பியன் பட்டம் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் சிந்து பெற்றுள்ளார்.

2017, 2018ஆம் ஆண்டுகளிலும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முடியாமல் போனது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு கோப்பையுடன் தாயகம் திரும்பியுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனது ரசிகர்கள் உட்பட அனைவரது ஆசீர்வாதத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நான் இன்னும் அதிகமாக கடின உழைப்பைச் செலுத்தி அதிகமான பதக்கங்களைப் பெறுவேன்.

இரண்டு முறை வெற்றியைப் பறிகொடுத்துவிட்டு இறுதியில் வென்றுவிட்டேன். இது என் வாழ்வின் அற்புத தருணம். ஓர் இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor