சிதம்பரம் ரவுடி கொலை: நால்வர் கைது

சிதம்பரத்தில் நடந்த கொலை தொடர்பாக, நேற்று (ஆகஸ்ட் 26) இரவு நான்கு பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியில் வசித்துவந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோழி பாண்டியன் மற்றும் நண்பர் மணிகண்டன் இருவரும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு, சாலையோர டிபன் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி பட்டாக்கத்தியால் வெட்டி சாய்த்துவிட்டுத் தப்பித்தார்கள்.

இதில் கோழி பாண்டியன் கொல்லப்பட்டார். முன் பகையா, பெண் தொடர்பா என்ற கோணத்தில் விசாரித்த போலீஸார் சந்தேகப்பட்ட ஒரு கும்பலை சம்பவம் நடந்த இரவே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

2014 செப்டம்பர் 2ஆம் தேதி இரவு கலுங்குமேடு பகுதியில் வசித்துவந்த ரவுடி ஆம்புலன்ஸ் குமார், அவரது தம்பி ராஜேஷ் இருவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர்.

தற்போது சிறையில் இருக்கும் ரவுடி சுரேந்தர் மூலமாக வெடிகுண்டு வீசி குமார் தலையை வெட்டி பந்தாடியதற்குத் திட்டம் வகுத்துக்கொடுத்தவர்தான் கோழி பாண்டியன் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் விதமாகத்தான் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு சம்பவம் நடந்துள்ளது என்றும், அதனால் ஆம்புலன்ஸ் குமார் ஆதரவாளர்கள் சிலரை போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள் என்றும் மின்னம்பலம்.

காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: இரட்டை கொலைக்கு பழி தீர்ப்பா? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

போலீஸ் விசாரணையில் ஆம்புலன்ஸ் குமார் மற்றும் அவரது தம்பி கொலைக்குப் பழிவாங்கும் வகையிலேயே, ஆம்புலன்ஸ் கோழி பாண்டியனைக் கொலைசெய்துள்ளது தெரியவந்துள்ளது.

பாண்டியன் மீது வெடிகுண்டு வீசி கொலைசெய்த மூவரில் ஜெயசீலன் என்பவரையும், ஆட்டோவிலிருந்த வெடிகுண்டு எடுத்துக்கொடுத்து உதவிசெய்த ராஜா, ஆம்புலன்ஸ் குமார் தந்தை மணி, குமார் மனைவி மஞ்சுளா ஆகிய நான்கு பேரைக் கைது செய்து நேற்று (ஆகஸ்ட் 26) சிறையில் அடைத்துள்ளார்கள்.

கொலைவெறி தாக்குதலை நடத்திய முக்கியமான இரண்டு குற்றவாளிகளை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது என்கிறார்கள் காவல்துறையினர்.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் பேசியபோது, “கோழி பாண்டியன் கொலை வழக்கில் குமாரின் மனைவி மஞ்சுளா, தந்தை மணியைக் குற்றவாளியாகச் சேர்த்தது, தற்போது சிறையிலிருக்கும் சுரேந்தரைத் திருப்திப்படுத்தும் செயல்தான்.

குமாரின் குடும்பத்தை சின்னாபின்னப்படுத்துவதுதான் இதன் நோக்கம். சம்பந்தமில்லாதவர்களைக் கொலை வழக்கில் இணைப்பது பெரும் பாவச்செயல்மட்டும் அல்ல. அதற்கான தண்டனையைச் சட்டம் தராவிட்டாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தர்மம் தரும்” என்கிறார்கள்.


Recommended For You

About the Author: Editor