அரசு மருத்துவர்கள் போராட்டம்!

தமிழகம் முழுவதும் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறை படுத்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் பல சமயங்களில் போராட்டம் நடைபெற்றிருக்கிறது.

தற்போது இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த 23ஆம் தேதி முதல் , பெருமாள் பிள்ளை, நளினி, நாச்சியப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகிய 6அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களில் 3 பெண் மருத்துவர்கள் மற்றும் 1 ஆண் மருத்துவருக்கு உடல்நிலை மோசமானதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தொடர்ந்து இன்று 5 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று காலை 7.30 முதல் நாளை காலை 7.30 வரை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணிக்க உள்ளோம். அதேவேளையில், அவசர சிகிச்சைப் பணிகளில் வழக்கம் போல மருத்துவர்கள் ஈடுபடுவர் என்று தெரிவித்துள்ளனர், இந்த போராட்டத்தில் சுமார் 18000 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் பரீசிலிக்கப்படும். போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர், கடந்த 5 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். பல்வேறு காரணங்களுக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் அமைச்சர் எங்களை வந்து சந்திக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை, நெல்லை என தமிழகம் முழுவதும் 18000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சிகிச்சை பெற முடியாமல் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து 12 மணிக்கு மேல் மருத்துவர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மருத்துவ கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்


Recommended For You

About the Author: Editor