ஊடகவியலாளர்களுக்கு இடையில் மோதல் – பொலிசில் பரஸ்பர முறைப்பாடு.

வவுனியா ஊடகவியலாளர் கே.கோகுலன் மீது சிறிடெலோ அரசியல் கட்சியின் இளைஞரணி தலைவர் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரப்பெரியகுளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு காயங்களுக்கு உள்ளான குறித்த ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வருடாந்த ஊடக சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு வந்த சிறிடெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக நிறுவனமொன்றின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஒலிவாங்கியை காண்பித்து இதனை ஊடக சந்திப்பில் வைத்தது யார்? என அங்கிருந்த ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டுள்ளார்.

எனினும் அனைவரும் மௌனமாக இருந்துள்ள போதிலும் தொடர்ந்து ஊடக சந்திப்புக்கு இடையூறு விளைவித்த நிலையில், தானே குறித்த ஒலிவாங்கியை வைத்ததாகவும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை எனவும் ஊடகவியலாளர் கே.கோகுலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் அவருடன் முரண்பட்ட இளைஞரணி தலைவர் வெளியில் சென்று ஊடகவியலாளர் வரும்வரை காத்திருந்து அவரை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊடகவியலாளரை காப்பாற்றி ஏனைய ஊடகவியலாளர்கள், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளரின் வீட்டின்மீது அண்மையில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிறிடெலோ கட்சியின் இளைஞரணி தலைவரும் குறித்த ஊடகவியலாளர் தன்மீது தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்