யாதுமானதாய்

நான் எழுதிச்சேமித்த கவிதையொன்றை நெடுநேரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அடைமழையில் தோய்ந்து
உடல் நடுங்கி
ஓர் ஓலைக்குடிசையின் தாழ்வாரத்தில் ஒதுங்கியிருந்தபோது
என்னை கதகதப்பாக்கிக்கொள்ள கைவசம் இருந்தது அதுதான்.

மேலும் பிரிதொரு பொழுதில்
காரிருள் சூழ் அடர்வனத்தில்
காலடியில் ஊரும் சர்ப்பங்களுக்கிடையே
கவனமாய் நான் அடியெடுத்து வைக்க ஒளிகொடுத்ததும் அதுவே.

ஊர் பிரிந்து உறவுகள் தொலைத்து
ஒற்றையாய் தலையணை அணைத்து
கண்ணீர் விட்டு கதறிய பொழுதுகளில்
என் வாய் பொத்தி தலைவருடி மடிசாய்த்துக்கொண்டதும் அதுதான்.

சாளரத்தில் தெரியும் பிம்பங்களை நிஜெமென்று நம்பித்தொலைத்து கையசைத்து கனவுகளை சிருஸ்ட்டித்துக்கொள்கையிலெல்லாம்
என் காது பிடித்து நம்பாதே கனவதென்று நிஜமுறைத்ததும் அதுவே.

காலிடறி கீழ் விழும் போது கைகொடுப்பானென நம்பிய தோழனே
கால் இடறி விட்டபோதில் உலகம் இதுதானென உணர்ந்துகொள்ளென
தோள் கொடுத்தென்னை தூக்கிவிட்டதும் அதுதான்.

கற்பனை சிறகு பூட்டி கடல் கடந்து தேசமளக்க கங்கணம் கட்டி நான்
வலிந்து பறக்க எத்தனிக்கையில்
கால்கள் உண்டு உனக்கு முதலில் நடந்துபாரென வழித்தடம் காட்டியதும் அதுவே.

இன்னும் உண்டு

என் சின்னச்சண்டைகளில் செல்லக்கோபங்களில் – என்
கள்ளத்தனமுள்ள கவிதைகளில்
மல்லுக்கு நிற்கும் மனோபாவத்தில்
சொல்லுக்கு சொல் அர்த்தம் கேட்டென்னை கல்லுக்குள் இருந்த சிலையாய் வடித்தெடுத்ததும் அதுதான்.

இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்
என்னை மீட்டித்த என் கவிதையை இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்.

நொடிகளை யுகங்களாக்கி நகரும்
கடிகார முள்ளை எத்தனை தரம் தான் முன்னோக்கி நகர்த்துவது?
நகர் என்று கூறியும் நகராத நாட்களை சபித்துக்கொண்டே இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

உயிர்ப்பின் ஆதாரமாய்
உறவுக்கு உறவாய்
உற்ற நண்பனாய்
வழியிற்கு துணையாய்
வாழ்வுக்கு வழிகாட்டியாய்
வரமெனவே வாய்த்த அதை
வலிந்துதான் தொலைத்தேன்…
கடந்து போவென கையுதிர்த்து
கண்திறந்துகொண்டேதான்
காற்றில் வீசியெறிந்தேன்…

 

சு. பிரபா


Recommended For You

About the Author: Ananya