
நாட்டின் சுயாதீன விடயங்களில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசத்தினர் தலையிடுகின்றமைக்கு, நாட்டின் ஸ்திரத்தன்மையற்ற தலைமைத்துவமே பிரதான காரணம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
மேலும், ஈஸ்டர் தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கம் மட்டுமன்றி, கடந்த அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “2014ஆம் ஆண்டே நாம் சஹ்ரான் ஹாசீம் தொடர்பாக தகவல்களை வெளியிட்டிருந்தோம்.
அவர் நாட்டை விட்டு வெளியேறி ஐ.எஸ். அமைப்புடன் இணையவுள்ளார் என்றும் காத்தான்குடியில் அவரது ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நாம் கூறினோம்.
அத்தோடு, காத்தான்குடியிலுள்ள சுபீ முஸ்லிம்களை இலக்கு வைத்து, இந்தத் தரப்பினர் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தோம்.
ஆனால், யாரும் அன்று கேட்கவில்லை. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெரும்வரை அவர் யார் என்றுக்கூட எவருக்கும் தெரியாது.
அன்றே அந்த அரசாங்கம் எமது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனினும், அது நடைபெறவில்லை.
இந்த அரசாங்கமும் அதே பாவமான செயற்பாட்டைத்தான் மேற்கொண்டது. இதனால், நாட்டு மக்களுக்கு தற்போது கவலை மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த நிலையில், தற்போது அவசரகாலச் சட்டத்தையும் அரசாங்கம் நீக்கிவிட்டது. எனினும், ஜனாதிபதி புதிய இராணுவத்தளபதியொருவரை நியமித்துள்ளார்.
இதற்காக நாம் நன்றிகளை அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எனினும், அமெரிக்கா உள்ளிட்ட தரப்பினர் தற்போது எதிர்ப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.
எமது நாட்டின் இராணுவத்தளபதியை நாம்தான் நியமிப்போம். எமது நாட்டின் தலைவருக்குதான் அந்த அதிகாரம் உள்ளது.
இதில், அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும்? ஸ்திரமான தலைமைத்துவமொன்று நாட்டில் இல்லாத காரணத்தினால்தான் எமது சுயாதீன விடயங்களில்கூட, சர்வதேசம் தலையிடுகிறது” என மேலும் தெரிவித்தார்.