மைத்திரியின் திடீர் முடிவு!!

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தன்னுடைய இம்முடிவினை அவர் அறிவித்துள்ளார் என ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும், மக்கள் வழங்கிய இந்த ஆணைக்கு தான் உட்பட்டு, தன்னாலான மக்கள் சேவையை செய்வேன் என்று கடந்த 2015ஆம் ஆண்டு பதவி ஏற்கும் போது மைத்திரிபால தெரிவித்திருந்தார்.

எனினும், அவர் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி தன்னுடைய முடிவினை அறிவிப்பார் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் என்றும் அதில் பொது வேட்பாளராக மைத்திரி போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் ஜனாதிபதி மைத்திரி இது தொடர்பில் தன்னுடைய எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்காக புதுடெல்லி சென்றிருந்த அவரிடம் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த மைத்திரி, “ மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுப்பதற்கு நான் அவசரப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவுக்கு தாம் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor