மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கும் இந்திய வீரர்!

உலகக்கிண்ண இந்திய அணியில் வாய்புக் கிடைக்காத விரக்தியில், அவசரப்பட்டு ஓய்வை அறிவித்து விட்டதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஒரு நாள் தொடரில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு வந்த போது, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்துக் கொள்ள 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். அதில் தேர்வாகவில்லை என்ற ஏமாற்றத்தினாலேயே ஓய்வு பெறுவதாக முடிவெடுத்தேன்.
உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு இல்லை. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று, கிடைக்கவில்லை. எனவே, அடுத்தகட்டம் நோக்கி நகர்வதுதான் சரி என நினைத்து அப்படி முடிவு எடுத்துவிட்டேன்.
இப்போது அதுபற்றி யோசிக்க நேரம் கிடைத்துள்ளது. இந்த முடிவு குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு, கடிதம் எழுத உள்ளேன்.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் விளையாடுவேன். அதற்கு முன் என் உடல் தகுதியை இன்னும் அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளேன்.
இந்திய அணியில் விளையாடுவது குறித்து தற்போது யோசிக்கவில்லை. ஆனால், நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் கலந்துக் கொள்வேன்” என கூறினார்.
2010ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் பலரினதும் கவனத்தை ஈர்த்த அம்பதி ராயுடு, 2013ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக் கொண்டார்.
நடுத்தர துடுப்பாட்ட வரிசை வீரரான அம்பதி ராயுடு, ஆரம்ப காலங்களில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி தனக்கென ஒரு இடத்தை அணியில் தக்கவைத்துக் கொண்டார்.
பின்னர், அணியில் சோபிக்க தவறியதால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட அவர், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் தனது மீள் வருகை நிரூபித்தார். சென்னை அணிக்காக விளையாடிய அவர் 16 இன்னிங்சுகளில் விளையாடிய அவர் 602 ஓட்டங்களை குவித்து அதிக ஓட்டங்களை பெற்ற நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பின்னர், மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்பி, தனது வழக்கமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால், சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக தமிழக சகலதுறை வீரர் விஜய் சங்கர் உள்வாங்கப்பட்டார். இதனால் ராயுடு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில், இதனை கடுமையாக விமர்சித்தார். எனினும், அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் இருவரும் காயம் காரணமாக விலகினர். ஆனால் மாற்று வீரர்களை தேர்வு செய்யும்போது ராயுடுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த அம்பதி ராயுடு. ஐ.பி.எல் உட்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
தற்போது 33 வயதான அம்பத்தி ராயுடு, அடுத்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ரி-20 உலகக்கிண்ண தொடருடன் ஓய்வுப் பெறாலம் என தற்போது இரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor