அவசரகால சட்டம் நீக்கப்பட்டதால் புர்கா தொடர்பில் தெளிவற்ற நிலை

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் தடை செய்யப்பட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்குமா இல்லையா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அவசர கால சட்ட விதிகளின் கீழ், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிய தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இந் நிலையில் அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், முகத்தை மூடி ஆடை அணிய விதிக்கப்பட்ட தடையும் நீங்கியுள்ளதா இல்லையா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கின்றது.

நிகாப் மற்றும் புர்கா ஆடைகளை பொது வெளியில் அணிவது தண்டனைக் குரிய குற்றமா இல்லையா என்பதில் குழப்பம் தொடர்கின்றது.

எனினும், அவசர கால சட்டம் நீக்கப்பட்ட போதும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது சரத்திற்கு அமைய, ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை பயன்படுத்தியே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறினார்.


Recommended For You

About the Author: Ananya