
இரத்தினபுரி பகுதியில் பேஸ்புக் நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் மூவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இரத்தினபுரி – ஹிதெலென்ன பகுதி ஹோட்டல் ஒன்றில் சனிக்கிழமை களியாட்ட நிகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது இரத்தினபுரியை அண்டியப் பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து ஐஸ் போதைப் பொருள் , ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகிய போதைப் பொருட்களும் மீட்கப்பட்டன.
இந்த களியாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்ததாக இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த தொடர்பாடல் நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.