அலிபாபாவும் நாலு வெங்காயங்களும்!

இந்தியாவில் இருந்து அலிபாபா என்னும் திருமாவளனை லண்டனுக்கு அழைத்து வந்துள்ளார்கள்.

அவரும் தனது தனது அற்புத விளக்கு என்று “அமைப்பாய் திரள்வோம்” என்னும் புத்தகத்தை எடுத்து வந்துள்ளார்.

ஏன் தேர்தல் பாதைக்கு போனீர்கள்?
ஏன் திமுக வுடன் சேர்ந்தீர்கள்?
ஏன் காங்கிரசை ஆதரிக்கிறீர்கள் ? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த அற்புத விளக்கில் விடை இருப்பதாக அவர் கூறுகிறார்.

இந்தியாவில் இருந்து யார் வந்தாலும் ஓடிச் சென்று ஈழத் தமிழருக்கு என்ன தீர்வு என்று கேட்பதை நம்மவர்கள் சிலர் வாடிக்கைiயாக வைத்திருக்கின்றனர்.

வந்தவரும் வாழ்க்கையில் ஒருமுறைகூட துப்பாக்கியை தூக்கியிருக்கமாட்டார். ஆனாலும் போர்த்தந்திரம் யுத்ததந்திரம் என்றெல்லாம் பக்கம் பக்கமாக எமக்கு கதை அளக்க ஆரம்பித்து விடுவார்.

சரி இதுதான் லண்டன் தமிழனின் தலைவிதி என்று நொந்து கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்டில் “அடங்க மறு, அத்து மீறு” என்றெல்லாம் கூறிவரும் திருமா ஈழத் தமிழர் இந்தியாவை எதிர்க்க கூடாது என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ்நாட்டு தமிழன் இந்துத்துவா மோடியையும் அமிர்த்ஷாவையும் விரட்டி அடிக்க வேண்டும் என கூறிவரும் திருமா, ஈழத் தமிழன் மோடியையும் அமிர்த்ஷாவையும் எதிர்க்கக்கூடாதாம். அவர்களுடன்தான் பேச வேண்டுமாம்.

தமிழ்நாட்டுத் தமிழனுக்கு ஏகாதிபத்தியம் முரண்பாடு எதிர்க்க வேண்டியது எனக்கூறும் திருமா, ஈழத் தமிழன் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கக்கூடாதாம். அதைக் கண்டு கொள்ளவே கூடாதாம்.

ஈழத் தமிழருக்கு தமிழீழம்தான் தீர்வு என்கிறார். ஆனால் தமிழீழத்தை அங்கீகரிக்காத இந்திய அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசக்கூடாதாம். ஏசினால் அப்புறம் அவர்களிடம் எப்படி ரீ வாங்கி குடிப்பது என்று கிண்டலாக கேட்கிறார்.

இந்திய அரசுதான் இப்பவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்து வருகிறது. ஈழத் தமிழர்களை நசுக்க இலங்கை அரசுக்கு உதவி வருகிறது.

ஈழத் தமிழர்கள் இந்திய அரசை எதிர்க்கவில்லை. இந்திய அரசுதான் ஈழத் தமிழர்களை அழிக்க முனைகிறது.

ஈழத் தமிழர்களை அழிக்காதே என்று இந்திய அரசைப் பார்த்து கூறவேண்டிய திருமா லண்டன் வந்து இந்திய அரசை எதிர்க்க வேண்டாம் என கூறுகிறார்.

திருமாவின் பேச்சைக் கேட்கும்போது இந்திய உளவுப்படையா அவருக்கு டிக்கட் போட்டு லண்டனுக்கு அனுப்பி வைத்ததோ என்று சந்தேகமாய் இருக்கிறது.

காலம் எமக்கு திருமாவை மட்டும் இனங்காட்டவில்லை. திருமாவை அழைத்து இந்திய அரசுக்கு துணைபோகும் நாலு வெங்காயங்களையும் சேர்த்து இனங்காட்டியுள்ளது.

– தோ.பாலா-


Recommended For You

About the Author: Editor